அஷ்ரஃப் கனி குறித்து காட்டமான வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அதற்கு முன்னதாகவே நாட்டை விட்டுப் பறந்து சென்றார் அதிபர் பதவியிலிருந்து வந்த அஷ்ரஃப் கனி. நாட்டு மக்கள் ஆபத்தில் இருக்கும் இந்த நேரத்தில், மக்களோடு மக்களாக நிற்க வேண்டிய அதிபர் இவ்வாறு சென்றது உலக அளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

அந்த வகையில் அஷ்ரஃப் கனியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த வகையில் “அஷ்ரஃப் கனி மீது ஒருபோதும் முழு நம்பிக்கை கொண்டதே கிடையாது. அவர் ஒரு வஞ்சகர் என்பதை நான் வெளிப்படையாகவே சொல்வேன். நமது செனட் குழு உறுப்பினர்களுக்கு விருந்தளிப்பதில் நேரத்தைக் கடத்தி வந்தார் அவர். அதன் மூலம் செனட் உறுப்பினர்களை எப்போதும் அவரது பாக்கெட்டுக்குள் அவர் வைத்திருந்தார்” என தெரிவித்துள்ளார் ட்ரம்ப். இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரஃப் கனிக்கு, ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.