கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு புதிய இடமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி ,அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் இந்த காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காணியே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இந்த காணியில் கொவிட் தொற்றில் உயிரிழக்கும் 2400 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உரிய இடம் என அம்பாறை மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்தி கூறியுள்ளதாகவும், இந்த இடம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு − ஓட்டமாவடி பகுதியில் தற்போது கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும், அந்த இடம் முழுவதும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு நிறைவு செய்யப்படும் தருவாயில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் ,குறித்த பகுதியில் இன்னும் 300 உடல்களை மாத்திரமே அடக்கம் செய்யக்கூடிய இயலுமை காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டமாவடி பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 1,470 பேரின் உடல்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ,இவற்றில் 1,383 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும், 24 பெளத்தர்களின் சடலங்களும், 39 இந்துக்களின் சடலங்களும், 24 கத்தோலிக்கர்களின் சடலங்களும் ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.