மஞ்சள் நிற லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நீல நிற பெயிண்ட் பூசி கடையில் கொள்வனவு செய்த பெண்ணை தேடும் பொலிசார்.

டிக்கோயா நகரிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு முகவர் விற்பனை

நிலையமொன்றில், மஞ்சள் நிற லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நீல நிற வர்ணம் பூசி, நீல நிற சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய, இந்த மாதம் 27ஆம் திகதி, ஓட்டோவொன்றில் வருகைத் தந்த பெண்ணொருவர், தனது கைவசம் இருந்த லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரைக் கையளித்து விட்டு, அதற்கு பதிலாக மற்றுமொரு சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த முகவர் நிலையத்துக்கு சமையல் எரிவாயு விநியோகத்துக்காக வருகைத் தந்த லொறியில், வெற்று சமையல் சிலிண்டர்களை ஏற்றும் போது, மஞ்சள் நிறம் வெளியே தெரிந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திலுள்ள பாதுகாப்பு கமெராவை பரிசோதித்த விற்பனை நிலைய உரிமையாளர், பெண்ணொருவர் குறித்த சிலிண்டரை கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், குறித்த வர்த்தகர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.