மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணச்சடங்கில் 15பேர் மட்டுமே கலந்துகொள்ளமுடியும் என மாவட்ட கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த ஒருசில தினங்களாக கொவிட் 19 தாக்கத்திற்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருக்கின்றது. இதன் காரணமாக உடனடியாக சில தீர்மானங்களையும் கட்டுப்பாடுகளையும் இறுக்கமாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

நேற்றைய தினம் எமது மாவட்ட செயலணிக் கூட்டத்தில் பல்வேறு தரமான கருத்தாடல்களை உள்வாங்கி பொதுவான சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம். மாகாணப் பணிப்பாளர் அவர்களும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். சகல வலயங்களிலும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் மாணவர்களை ஒன்றுதிரட்டி பரீட்சைகள் அல்லது ஏதாவது நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டுமாக இருந்தால் அதற்கான முன் அனுமதியை சுகாதார தரப்பினரிடமிருந்து பெற்ற பின்னரே பாடசாலைக்கு மாணவர்களை அழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது மாணவர்களின் ஒன்றுகூடலை தவிர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.

அத்துடன் சில சமூக விடயங்களிலே பொதுமக்கள் ஒன்றுகூடும்பொழுது ஒரு புதிய கொத்தணி உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே மரணச் சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை ஒரே தடவையில் பதினைந்து பேராக மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று திருமணச் சடங்குகளிலே பதினைந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியும். அதனைவிட கூடுதலானவர்கள் கலந்துகொண்டால் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலே சில ஆலயங்களிலே பக்தர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டார்கள். இதன் காரணமாக புதிய கொத்தணிகள் உருவாகும் என்ற ஐயப்பாடு பலரால் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை மதஸ்தலங்களுக்குச் செல்கின்ற பொதுமக்களுக்கான அனுமதியை இடைநிறுத்தி நாளாந்த பூசைகள் மற்றும் மதக்கடமைகளிலே அந்த ஆலய மதகுருவும் நிர்வாகத்தினர் மாத்திரம் கலந்துகொண்டு கடமைகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

நாடளாவிய ரீதியிலே கொரொனா பரவலின் அச்சுறுத்தல் பாரியளவில் எதிர்கொள்ளப்படுகின்றது. இதன்காரணமாக அரசாங்கத்தினால் பல தீர்மானங்கள் நாளுக்குநாள் எடுக்கப்பட்டு அமுலாக்கப்பட்டு வருகின்றது. 

மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களும் இதனை விளங்கிக்கொண்டு சுயகட்டுப்பாடுகளை தாங்களாகவே மேற்கொண்டு சமூக ஒன்றுகூடல்களை குறைத்து வீட்டை விட்டு வெளியேறாது இருந்தால் சுகாதார துறையினருக்கும் ஏனையவர்களுக்கும் நாங்கள் உதவி செய்பவர்களாக இருப்போம். எனவே இந்த நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை பொறுத்தவரை கடந்த 5ஆம் திகதி சமுர்த்தி பிரிவில் 10பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டார்கள். நேற்றைய தினம் வரை 20பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 18ஆம் திகதி வரை சமுர்த்திக் கிளை மூடப்பட்டுள்ளது.