நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல. விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழக்க வேண்டி ஏற்படும். 

அதேபோன்று, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவும் நாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்போதைய நிலைமையில், நாளாந்தம் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வருகை தரும் நிலைமை உருவாகியுள்ளது. நாட்டை முடக்கினால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டி ஏற்படும்.

அதேபோன்று, நாளாந்த வருமானம் பெறுவோர், சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, நாட்டை மூடுவதால் வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவதிலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிக்கல் ஏற்படும். 

இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்த உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட, நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.  

உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. 

சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது.