ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றவேண்டும் என பெற்றோர்கள் செய்த காரியம் நெஞ்சை உருகச் செய்யும் விதமாக உள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதப் படையினர் கைப்பற்றிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் ஏர்போர்ட்டிற்கு வந்து குவிந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அமைதியான ஆட்சி தருவோம் என உறுதியளித்த தாலிபான்கள் காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிவதால், அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், மேலும் பதற்றமடைந்த அங்கிருந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என வேலிக்கு அந்தப்புறம் இருக்கும் ராணுவ வீரர்களிடம் தங்கள் குழந்தைகளை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளனர்.

காபூல் ஏர்போர்ட்டை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை. தங்கள் குழந்தைகளாவது நிம்மதியாக வாழ வேண்டும் என அவர்களை முள்வேலியை தாண்டி ராணுவ வீரர்களிடம் வீசினர்.

இதுகுறித்து ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், 'அங்கிருந்த அம்மாக்களில் பலர் தங்கள் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என சத்தம் போட்டு கத்தினர். இது ஒரு துன்பகரமான நிகழ்வு.

பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை கொடுக்கும் போது, ஒரு சில குழந்தைகள் முள்வேலிக்குள்ளேயே விழுந்தது. அந்த பயங்கரத்தை சொல்வதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை, அந்த காட்சியைக் கண்டு நாங்கள் அனைவரும் மனம் உடைந்து அழுதுவிட்டோம்' எனக் கூறினார்.

மேலும், 7 மாத பெண் குழந்தை ஒன்று, பெற்றோர் பிரிந்த நிலையில், ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்த புகைப்படம் வெளிவந்து அனைவரையும் கண்கலங்க செய்தது.