ஆப்கானிஸ்தானை விட்டு அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.

தலைநகர் காபூலை தாலிபன் போராளிகள் சூழந்துள்ள வேளையில், இந்த செய்தி வெளி வந்துள்ளது.

அந்த நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலேயும் நாட்டை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் தாலிபன்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். பல மாகாணங்களில் ஆளுநர்கள் தாங்களாகவே ஆட்சி அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்து விட்டனர்.

இந்த நிலையில், தாலிபன்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கிய 10 நாட்களுக்குள்ளாகவே நாட்டின் அனைத்து இடங்களிலும் அவர்களின் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, இன்று பிற்பகலில் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் அதிபர் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், தாலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடு செல்வதால், அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் அதிகரித்தது.

அவரது அமைச்சரவையில் இருந்த பலரும் அமைதியாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக இன்று மாலையில் அறிவித்தனர்.

இந்த நிலையில், அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு சென்று விட்டதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.