அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வெறும் பத்து நாட்களில் ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றி வந்த தாலிபான்கள், கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-08-2021) அன்று தலைநகர் காபுலையும் கைப்பற்றினர்.

மூன்று மாதங்கள் ஆகலாம் என அமெரிக்க ராணுவம் கருதிய நிலையில் பத்து நாட்களில் நாட்டைக் கைப்பற்றியது ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்கா அளித்த அதிநவீன ஆயுதங்கள் ஆப்கான் அரசிடம் இருந்தபோதிலும் அவர்கள் தாலிபானை எதிர்க்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபான்கள் அதிபர் மாளிகையை நெருங்கியவுடன், உடனடியாக அதிபர் அஷ்ரப் கனி ஒரு சில அரசு அதிகாரிகளுடன் நாட்டைவிட்டு தப்பித்து ஓடினார். தாங்கள் முன்பு போன்று கிடையாது, இனி புதுவிதமான ஆட்சி முறையை பார்ப்பீர்கள் என்று தெரிவித்த தாலிபான்கள், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மக்களை இழுத்துச் செல்வதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு தப்பித்து வருகின்றனர். பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், எந்தவித உள்நாட்டு எதிர்ப்பும் இல்லாமல் இருந்த தாலிபான்களுக்கு  ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகணத்தில் உள்ள போராளிக் குழுவினர் எதிர்க்க தொடங்கியுள்ளனர். மொத்தம் இருக்கும் 34 மாகாணங்களில் இந்த ஒரு மாகாணம் மட்டுமே தாலிபான்களை நெருங்கவிடாமல் வைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேலும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த 3 மாவட்டங்கள் பஞ்ச்ஷிர் போராட்டக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். போராட்டக் குழுவினரும், பொதுமக்களும் இணைந்து மிகுந்த எழுச்சியுடன் தாலிபான்களை எதிர்த்து போராடத்தொடங்கியுள்ளனர்.

ஞ்ச்ஷிர் புலிகள் என அழைக்கப்படும் இவர்கள் தாலிபான்களுடன் போராடி, துப்பாக்கிச்சூடு நடத்தி பக்லான் மாகாணத்தின் பானு, பொல் இ ஹெசார் மற்றும் தேஹ் சலா ஆகிய மூன்று மாவட்டங்களை தாலிபான்களிடம் இருந்து மீட்டுள்ளனர். புவியல் ரீதியாக இந்துகுஷ் மலைத்தொடரில் இந்த பகுதி உள்ளதால் தாலிபான்களால் உள்ளூர் போராளிக் குழுக்களான பஞ்ச்ஷிர்களை எதிர்த்து போராட முடியாமல் திணறி வருகிறார்கள்.