காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க - ஜெர்மன் படையினருக்கும், மர்ம நபர்கள் சிலருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றியது முதல் நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானோர், காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்தனர். அதையொட்டி, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஆப்கான் பாதுகாப்பு படை, வெளிநாட்டு படை மற்றும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காபூல் விமான நிலையத்தில் வடக்கு நுழைவு வாயிலில் மர்ம நபர்கள் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஜெர்மன் Joint Forces Operations Command தெரிவித்துள்ளது.

இதில், ஆப்கான் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டு படையினரும் ஈடுபட்டதாக தெரிவித்த ஜெர்மன் Joint Forces Operations Command, ஜெர்மன் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளது.