இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர் குறித்த மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களாக அவர்களுக்கிருந்த நோய்களே இந்த மரணங்களுக்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு இரண்டு வாரங்களின் பின்னரே தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு செயற்றிறன் அதிகரிக்கிறது.

அல்ஃபா பிறழ்வு தொற்றுக்கு உள்ளானவர்களை விட, டெல்டா பிறழ்வு தொற்றுக்கு உள்ளானவர்களின் ஊடாக வைரஸ் தொற்று பரவும் வீதம் அதிகமாகும்.

ஒருவருக்கு டெல்டா பிறழ்வு தொற்று ஏற்படுமாயின், இரண்டு நாட்களுக்குள் அவருக்குள் அதிகளவான வைரஸ்கள் உருவாக்கப்படுவதுடன், தும்மல் அல்லது வேறு வழிகளினூடாக அதிகளவான வைரஸ்கள் காற்றில் கலக்கக்கூடும்.

இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 21 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.