போலி நாணயத்தாள்களை வீட்டில் அச்சிட்ட 2 பேர் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் நாணயத் தாள்களை அச்சிடப் பயன்படும் இயந்திரமொன்றும், 100 ரூபா நாணயத்தாள்கள் 25 உம், 500 ரூபா நாணயத்தாள்கள் 18 உம் , ஒரு 1,000 ரூபா நாணயத்தாளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 12,500 ரூபாவுக்கும் அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

100 ரூபா, 500 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தாததால் குறித்த சந்தேகநபர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் தங்கள் அன்றாட பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது பயன்படுத்தும் நாணயத்தாள்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.