மணிமேகலைக் காப்பியத்தில்' கூறுவதைப்போல சுடுவோர், இடுவோர், தாழ்வையில் அடைப்போர், தாழியிற் கவிழ்ப்போர் என்ற நான்கு வகையான புதை நடைமுறைகளை இங்கே காண முடிகிறது.

கீழடி ஆய்வு பல ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கிறது. நான்கு, ஐந்து, 6-ம் கட்டம் என தமிழக தொல்லியல்துறை கீழடியின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து விரிவான அகழாய்வு செய்து வருகின்றது.


கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். எப்போதும் இல்லாத அளவில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என்று நான்கு இடங்களில் செய்யப்படுகிறது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 3 மாத கொரோனா ஊரடங்கு, மழை பொழிவுப் தொய்வுகளுக்கும் இடையில் அகழாய்வு வேகமெடுத்து வருகிறது. 6ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை இந்த நான்கு இடங்களையும் சேர்த்து 130 குழிகளுக்கு மேல் தோண்டப்பட்டு ஆய்வு தொடர்கிறது.

மேலும் தமிழ் வரலாற்று அறிஞர் சாந்தலிங்கம், "குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் இருந்து இந்த ஊர் கொந்தகை என பெயர் மாற்றமடைந்துள்ளது. இதனை 11-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிந்தது. அதற்கு முன்பாக வேறு பெயர்கள் கூட இருந்திருக்கலாம். தற்போதைய கீழடி நகரமாகவும் அங்கு வாழ்ந்த மக்களின் சுடுகாடாக கொந்தகையும் பார்க்கப்படுகிறது.

கொந்தகை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. தற்போது இது அகழாய்வு செய்யப்படுவதால் பல செய்திகள் வெளியே தெரிகின்றன. சங்க இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் முறையை கொந்தகை அகழாய்வுக் களம் வெளிப்படுத்தி வருகிறது. அதற்காக இது சதி போன்ற பழக்கம் என்று வரையறுக்கவியலாது. காரணம், தீப்பாய்ந்து உயிர் மாய்ப்பதைத்தான் சதிப்பழக்கம் என்பார்கள். ஒரே நேரத்தில் இருவர் இறந்துவிட்டால் அவர்களை ஒரே தாழியில் வைத்துப் புதைக்கின்ற வழக்கமாக இருக்கலாம்.

கொந்தகையைப் பொறுத்தவரை, இதனைச் சுற்றி பல்வேறு ஊர்களின் ஈமக்காடாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம். காரணம் ஊரின் தென் பகுதியில் இதுபோன்ற ஈமக்காடுகள் இருப்பது வழமை. இதனைக் குறிப்பிட்டே நமது தமிழ் இலக்கியங்கள் 'தென் புலத்தார்' என்று இறந்துபட்டவர்களை அடக்கம் செய்கின்ற இடங்களைக் குறிப்பிடுகின்றன. மேலும் 'மணிமேகலைக் காப்பியத்தில்' கூறுவதைப்போல சுடுவோர், இடுவோர், தாழ்வையில் அடைப்போர், தாழியிற் கவிழ்ப்போர் என்ற நான்கு வகையான புதை நடைமுறைகளை இங்கே காண முடிகிறது.

ஒரு தாழியைக் கொண்டு மற்றொரு தாழியைக் கவிழ்க்கும் முறைகள் இங்கே பரவலாக இருந்துள்ளன. ஒரே பானையிலிருந்து இரண்டு மண்டையோடுகள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது" என்றார்.

இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சியாளர்கள், "தற்போது கொரோனா சமயம் என்பதால் பல்கலைக்கழகத்தில் எலும்பு மாதிரிகளை ஆய்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். பல்கலைக்கழகம் திறந்த பின் மீண்டும் ஆய்வுகள் மேற்கொள்வோம். எலும்பு மாதிரிகளில் உள்ள டி.என்.ஏ மூலம் காலம், அப்பகுதி மக்கள் யார், நாகரிகம் என்ன என்பதை கண்டறிய முடியும். தற்போது குளிர் ஊட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக எலும்புகளை வைத்துள்ளோம்" என்றனர்.