உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த நேர்காணலின் சுருக்கம்:
“இன்றைய சூழலில், மதிப்புக்குரிய பிரகாஷ் மற்றும் புகழேந்தியின் அமர்வில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இதில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சட்டப்பிரிவு 176- குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்குச் சென்றார்.


அப்படி விசாரணைக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் போனபோது ஒத்துழைப்பு தராமல் நக்கல், கிண்டல் எல்லாம் பண்ணுகிறார்கள். இதெல்லாம் ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி முன்னிலையில் நடக்கிறது. மூன்றாவதாக மகாராஜன் என்கிற எஸ்பி முன்னிலையில் நடக்கிறது. இதில் மகாராஜன் தான், உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.  அதை விடவும் ஒன்று சொன்னார், அதையெல்லாம் சொல்ல முடியாத வார்த்தைகள்.

மாஜிஸ்திரேட்யின் விசாரணையின் போது, விடியவிடிய தந்தை, மகனை போலீஸார் கொடூரமாக தாக்கியதை அடுத்து, ரத்தக்கறையினை லத்தியிலும் மேஜையிலும் இருந்ததை ரேவதி காண்பித்துள்ளார். தயங்கித் தயங்கி பயந்து பயந்துதான் கையெழுத்து போட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கேட்டால், ஒரு போலீஸ் தப்பி ஓடுகிறார். அப்போதுதான் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது  என்று மகாராஜன் சொல்கிறார். ரேவதி சாட்சி சொல்லும்போது, ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியும், மறைந்திருந்தும் போலீஸார் அச்சுறுத்தியுள்ளார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நீதிபதியையே இப்படி போலீஸ் மிரட்டுகிறார்கள் எனும்போது, சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வழக்கறிஞர்களின் நிலையையும் யோசித்து பாருங்கள்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவில், முதல் முறையாக சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டுக்கு மாற்றியதோடு, தடயவியல் நிபுணர்களுக்கு உடனடியாக தரவுகளை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர். உண்மையில் நீதியரசர்கள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி இருவரும், மாஜிஸ்திரேட்டை அவமதித்த போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

மேலும், இந்த 3 காவலர்களுக்கும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராக வாய்ப்பில்லை என்பது உறுதி. ஆக தமிழகத்தில் இருக்கும் தனியார் வழக்கறிஞர்களும் இவர்களுக்கு ஆதரவாக முன்வரக்கூடாது என நான் கேட்டுக்கொள்கிறேன். இறந்து போனவர்களுக்கு மோசமான காயம் இருப்பதால், ஜெயராஜையும் பெனிக்ஸையும் படுகொலை செய்த பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஸ்ரீதர் மற்றும் உடந்தையாக இருந்த பிற போலீஸார் மீது 302 கொலைவழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்பதை மதிப்புக்குரிய நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது. இதனால் சாட்சியங்களுக்கு தகுந்த பாதுகாப்பு உறுதியாக கிடைக்கும். அதே சமயம் இவர்கள் சட்டப்பூர்வமாக குற்றவாளிகளாக குறிப்பிடப் படாததால், இவர்கள் எந்த விதத்திலும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக ஷேடோ அரெஸ்ட் பண்ணுவார்கள். போலீஸார் போட்ட முதல் தகவல் அறிக்கையில், இறப்புக்காக குறிப்பிடப்பட்டுள்ள காரணமும், அந்த அறிக்கையுமே போலி. இது தார்ப்பாயில் வடிகட்டின பொய்.” என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.