கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பகுதியிலுள்ள தனியார் தோட்டம் ஒன்றில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு பெண் யானை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர், சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் காதில் ரத்தம் இருந்ததால், யாரவது துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில், யானையின் தலையில் 2 செ.மீ அளவிலான ஈயக்குண்டு தங்கியிருப்பது தெரிய வந்தது. அதே போல இடது காதில் இருந்த காயத்தை ஆராய்ந்த போது, காது அருகில் இருந்து மூளை வரை துளை இருந்ததும்,  யானையின் மண்டை ஓடு பிளந்து போனதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முதலில், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக வனத் துறையினர் நினைத்திருந்த நிலையில், பின்னர் காதில் இருந்த காயத்தை வைத்து யாரோ சுட்டிருக்கலாம் என்பதை முடிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், தோட்டம் ஒன்றிற்கு யானைகள் சிலர் கூட்டமாக வந்ததும் அதனை விரட்ட வேண்டி துப்பாக்கி எடுத்து ஒருவர் சுட்டதில் பெண் யானை மீது குண்டு பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.