அரசாங்கமும், தேர்தல் ஆணைக்குழுவும் மக்களை சிந்தித்தால், தற்போதைய சந்தர்ப்பத்தில் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் அதன் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது நிபந்தனைகளை விதிப்பது என்பன ஜனநாயகமல்ல. இதனால், எதிர்க்கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும்.
தேவையற்ற சட்டத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கமும், தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தலை ஒத்திவைக்க முடியும். அப்படியான நிலைமையில் கூட்டங்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் பற்றி ஆராய்ந்து பார்க்க முடியும்.
கொரோனா இரண்டாவது அலை தொடர்பான விபரங்கள்,புள்ளி விபரங்கள் இவை அனைத்தையும் ஆளும் தரப்பு மாத்திரமே வெளியிடுகிறது.
இந்த தகவல்களில் வெளிப்படை தன்மை இருக்கின்றதா, உண்மை இருக்கின்றதா, உண்மையா, பொய்யா என்பன குறித்து பெரிய குழப்பம் உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக தான் இது தேர்தலை நடத்த வேண்டிய காலம் அல்ல என நாங்கள் கூறினோம்.
தேர்தல் ஆணைக்குழு திகதியை கூறாமல் இருந்திருந்தால், அரசாங்கம் திகதியை அறிவிக்கும் நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாகவே அவசரமாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்துவதாக அறிவித்த பின்னர் நிபந்தனைகளை விதிக்க தேர்தல் ஆணைக்குழு உட்பட எவருக்கும் தார்மீக உரிமையில்லை. நிபந்தனைகளை விதிப்பதால், எதிர்க்கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும். இது ஜனநாயகம் அல்ல எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.