திருநங்கையை காதலிப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், இளைஞர் ஒருவரும் திருநங்கை ஒருவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாற்றை சேர்ந்த திலீப் (26) என்ற இளைஞர் உஜாலா கம்பெனி ஒன்றில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திலீப்பும், காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்த சிவானி என்கிற திருநங்கையும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் காதலும் திலீப் வீட்டில் தெரிய வர கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவானியை விட்டு விலகவும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தங்களின் காதல் மீது நம்பிக்கைக் கொண்ட திலீப்பும், சிவானியும் சில நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேறி காரைக்கால் அடுத்துள்ள ஒடுதுறை என்கிற பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து அதில் இருவரும் கணவன், மனைவியாகவே வசித்து வந்துள்ளனர்.
இதையடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே திலீப்பின் வீட்டார் இடைவிடாது தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிவானி இருவரும் பிரிந்துவிடலாம் எனவும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு மீண்டும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள் (20.06.2020) காலை வெகு நேரம் ஆகியும் அவர்கள் குடியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்க்கையில், திலீப்பும் சிவானியும் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.