லடாக் எல்லை பிரச்சனையில் சீனா பின்வாங்கியுள்ளது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேற்று முன்தினம் இரவு கடுமையாக மோதிக் கொண்டதில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சீனாவை சேர்ந்த சுமார் 35 ராணுவ வீரர்கள் இந்தியாவின் பதிலடியில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சீனா தனது பலி எண்ணிக்கை, பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அது சண்டையிட விரும்பவில்லை என்று தெரிவித்து பின்வாங்க ஆரம்பித்துள்ளது. 
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இன்று ஒரு பேட்டி அளித்துள்ளார். 
அதில், தூதரக அதிகாரிகள், ராணுவ மட்டத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு சீனா விரும்புகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு இறையாண்மை சீனாவின் வசம்தான் உள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், எல்லைப்புற இறையாண்மையை மதிக்காமல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 
கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு நடுவேயும் இந்திய தரப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய தரப்பு தனது ராணுவ வீரர்களை கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் எல்லைக்குள் புகுந்து தூண்டுதல் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட வேண்டாம்.
சீனாவுடன் இணைந்து சரியான பாதையில் பயணிக்க வேண்டும். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கிறோம். ராஜாங்க ரீதியிலும், ராணுவ வழியாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இரு நாடுகள் இடையேயும் போதிய வசதி உள்ளது.
சீனாவின் எல்லைக்குள்தான் விதிமீறல் நடந்துள்ளது. இதற்காக சீனா யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. மேற்கொண்டு மோதல்கள் நடைபெறுவதை சீனா விரும்பவில்லை. 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் மூலம் சீன தரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வர இறங்கி வருவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.
ஆனால் கடந்த காலங்களில் சீனா இதுபோல ஆசை வார்த்தை கூறி விட்டு, தனது ராணுவ பலத்தை எல்லைகளில் அதிகரித்து வந்துள்ளது வரலாறு. 
முதுகில் குத்துவது அவர்களுக்கு புதிது கிடையாது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே இதை அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போதும்கூட கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின்போது சீனப் படைகள் இரண்டு கிலோமீட்டர் பின்வாங்கிச் சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியிட்டனர். 
இதை நம்பி இந்திய படையினரும் பின்வாங்கினர். ஆனால் திடீரென்று நேற்று முன்தினம் இரவு சீன படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்தியா பதிலடி கொடுக்க தயாராக இருப்பதை உணர்ந்து கொண்டு இவ்வாறு சீனா பம்மாத்து காட்டுகிறது என்று சில ராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஜவஹர்லால் நேரு காலத்தின்போது 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் சீனா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் பலவற்றை கைப்பற்றிக்கொண்டு கொல்கத்தா நோக்கி வந்தபோது, அமெரிக்காவும், பிரிட்டனும் இந்தியாவுக்கு ஆதரவாக வரக்கூடும் என்பதை உணர்ந்து, திடீரென தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது நினைவிருக்கலாம்.