ஆஸ்திரேலிய நடிகருக்கு சீனா மரண தண்டனை விதித்திருப்பதால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகர் கர்ம் கில்ஸ்பி என்பவர் முதலீட்டு பயிற்சியாளராக தொழில் செய்து வந்தார். இவர் கடநத் 2013ஆம் ஆண்டில் சீனாவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை அளித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென ஆஸ்திரேலியா முன்மொழிந்த பிறகு இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய பொருட்கள் மீதான வரியை சீனா உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், கர்ம் கில்ஸ்பிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவை தூண்டிவிடுவதாக அமைந்துள்ளது.
கர்ம் கில்ஸ்பி வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், அதிகாரிகளும் சீன தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும் திடீரென அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது சீனா-ஆஸ்திரேலியா உறவில் கசப்புத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், “ஆஸ்திரேலிய குடிமகனான கர்ம் கில்ஸ்பிக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது எனக்கும், அரசுக்கும் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.