சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு சோதனைச்சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.


அப்போது அவ்வழியாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினைய கிருஷ்ணன் இருவரும் தங்களது காரில் வந்துள்ளனர். அவர்கள் வந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 24 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்களை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் செல்வம் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரும் அடுத்த சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னையை சேர்ந்த மதுப்பிரியர்கள் செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சென்னை திரும்பும்போது போலீசார் சோதனையில் சிக்கும் போது அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலைத்தில் சிறைபிடிக்கும் போலீசார், நடிகையின் காரை மட்டும் ஏன் விடுவித்தனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.