பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர்வை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக வருண ஜயசுந்தர கடமையாற்றும் நிலையில், அவரை அதிரடிப் படை கட்டளை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் , தற்போது தேர்தல் காலம் என்பதால், தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை தற்போது அதிரடிப் படைக் கட்டளைத் தளபதியாக இருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயணல் குணதிலகவை திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வருண ஜயசுந்தர ஏற்கனவே பொலிச் விஷேட அதிரடிப் படையில் நீண்டகாலமாக கடமையாற்றிய அதிகாரியாவார்.
அத்துடன் அவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக பணிபுரிந்த போது அவரின் கீழ், அதிரடிப் படையில் விஷேட பாதாள உலக ஒழிப்பு படையணி செயற்பட்டது.
இதன் பின்னணியிலேயே அவர் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்ற பின்னர் அதிரடிப் படைக்கு வெளியே கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி அண்மையில் நியமித்த போதைப் பொருள், பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியில் வருண ஜயசுந்தரவும் உறுப்பினராக உள்வாங்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை அதிரடிப் படை கட்டளை தளபதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.