மாஸ்க் அணியாமல் வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞரின் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீசாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பினத்தவரை காவலர் ஒருவர் கழுத்து பகுதியை முட்டியால் அழுத்தியதால் மூச்சு திணறி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தன்னால் மூச்சு விட முடியவில்லை என ஜார்ஜ் பிளாயிட் கெஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்காவில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தால் அமெரிக்கா ஸ்தம்பித்து போயுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இதேபோன்று சம்பவம் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் நேற்று முகேஷ் குமார் என்ர இளைஞர் மாஸ்க் அணியாமல் நடந்து சென்றுள்ளார். இதைப் பார்த்த காவலர்கள் ‘ஏன் மாஸ்க் அணியவில்லை?’ என அவரிடம் கேட்டுள்ளனர். இதனால் முகேஷ்குமாருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது போலீசார் ஒருவர் முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியால் அழுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த ஜோத்பூர் போலீஸ் கமிஷ்னர் சந்த்ரா,‘காவலர்களிடம் முகேஷ்குமார் அத்துமீறி நடந்துள்ளார். கண்களில் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனை அடுத்து ஜீப்பை வரவழைத்து அவரை ஏற்ற போலீசார் முயன்றுள்ளனர். அப்போது போலீசாரை முகேஷ்குமார் தாக்க தொடங்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்புக்காக அவரை பிடிக்க தொடங்கினர். சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்குவது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமதிப்பதற்கு சமம்’ என அவர் தெரிவித்துள்ளார். முகேஷ்குமாரின் மீது தந்தையை தாக்கியது உட்பட சில வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மக்களை எப்படி கையாள வேண்டும் என போலீசாருக்கு பயிற்சி தேவை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை போலீசார் இன்னும் சில நிமிடங்கள் முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியிருந்தால் அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு நடந்ததுபோல் அவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.