கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகின் பல நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அதே நேரத்தில், தங்களது தொழில்களையும் வீட்டில் இருந்தே மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் செய்வோர்களுக்கு வீடியோ கால் செயலிகள் மிகப்பெரிய பங்கை ஆற்றி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி கற்கவும், தொழில் செய்வோருக்கு தங்களுடன் பணிபுரிவர்களுடன் தொழில் குறித்து பேசிக் கொள்ளவும், வெகு தொலைவில் இருக்கும் உறவினர்களை இணைக்க வீடியோ கால் செயலிகள் மிகப்பெரிய உதவியைச் செய்து வருகிறது.

மற்ற வீடியோ கால் செயலிகளை விட ஜூம் வீடியோ கால் செயலியை அதிக பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சீசனை கருத்தில் கொண்டு, வாட்ஸ் ஆப் செயலியில் முன்பு நான்கு பேர் மட்டுமே ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைந்திருக்க முடியும் என்பதை மாற்றி இணைந்திருப்பவர்களின் எண்ணிக்கையை 8 - ஆக அதிகரித்தது. அதே போல ஃபேஸ்புக்கிலும் மெசஞ்சர் ரூம் என்ற பெயரில் 50 பேர் பங்கு பெறும் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து அனைத்து வீடியோ கால் பயனாளர்களையும் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய நோக்கில் கூகுளின் 'கூகுள் மீட்' என்ற வீடியோ கால் செயலி பல வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னதாக இந்த கூகுள் மீட், தொழில் மற்றும் கல்வி சம்மந்தமாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து காரியங்களுக்கும் பயன்படும் வகையில் ஒரே நேரத்தில் 100 பேர் பங்குபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஜூம் செயலியில்  சப்ஸ்க்ரைப் செய்திருந்தால் மட்டுமே 40 நிமிடங்களுக்கு மேல் வீடியோ காலில் இணைந்திருக்க முடியும். ஆனால் கூகுள் மீட் செயலியில் 60 நிமிடம் வரை இலவசமாக இணைந்திருக்க முடியும் வசதியுடன் இணையத்தில் மற்றும் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்பாடுகள் வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அனைத்து வசதியாகளையும் விட 'Noise cancellation' எனப்படும் புதிய வசதி அனைவரது கவனத்தையும்  'கூகுள் மீட்' பக்கம் திருப்பியுள்ளது. அதாவது, உதாரணத்திற்கு நீங்கள் கீ போர்டு டைப் செய்யும் சத்தம், நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் மின் விசிறியின் சத்தம், போன்ற உங்களை சுற்றியுள்ள சத்தங்களை குறைத்து நீங்கள் உரையாடும் நபர்களுக்கு உங்களுடைய சத்தத்தை மட்டும் தெளிவாக கேட்க உதவி செய்யும் வசதியே அது.

ஜூம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகியவற்றை விட சிறந்ததாக கூகுள் மீட் அறிமுகப்படுத்திய Noise cancellation வசதி மற்ற வீடியோ கால் செயலிகளை தங்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.