பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவத்தில், தமிழக விமானி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள பிராசல் விமான தளத்தில், விமானிகள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலே பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று, திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து, தரையை நோக்கி வேகமாக வந்தது. வந்த வேகத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா, பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடமே பரபரப்பான நிலையில், அங்கு வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.