அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டத்திற்கு இடையே ஐபோன் ஷோரூம்கள் சூறையாடப்பட்டு அதில் இருக்கும் ஐபோன்கள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபோன் திருடியவர்களை ஆப்பிள் நிறுவனம் நூதனமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட் காவல்துறை கைது நடவடிக்கையின்போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டங்கள் பல நாட்களாக நீடிக்கும் நிலையில், அமெரிக்க மக்களின் மனநிலையை புரிந்து கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஷோரூம்களை ஒவ்வொன்றாக மூடத் தொடங்கியது.
ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என அறிக்கையும் வெளியிட்டது. ஆனால் கடைகள் மூடப்படுவதற்கு முன்னர் இந்த சூழலை பயன்படுத்திய வன்முறையாளர்கள் பல கடைகளை சூறையாடியுள்ளனர்.

பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் நிறவனத்தின் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு சில வன்முறையாளர்கள் புகுந்து ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இருப்பினும் கொள்ளையடிக்கப்பட்ட மொபைல் போன்கள் பலவற்றைக் கண்காணிக்க முடிகிறது என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மினியாபோலிஸ், வாஷிங்டன் மற்றும் பிலடெல்பியாவில் அமைந்துள்ள சில்லறை விற்பனை கடைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

இந்த சில்லறை விற்பனையகங்களில் இருந்து திருடப்பட்ட ஆப்பிள் சாதனங்கள் குறித்து நிறுவனம் தரப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்த சாதனம் முடக்கப்பட்டுள்ளது மற்றும் கண்காணிக்கப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும், ஐபோன்களைத் திருடியவர்களை அதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக அதிகாரிகளால் பிடிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் திருடியவர்கள் தாமாகவே முன்வந்து ஐபோன்களை திரும்பக் கொடுப்பது சிறந்த செயல் என ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.