வேலூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7000 கோழிக்குஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு கோழிப்பண்ணைகள், கோழி தீவனம் வைக்கும் அறை உள்ளிட்டவை தீயில் எரிந்துள்ளன. தீ விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்புப்படையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.


தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 7000 கோழிக்குஞ்சுகள் துடிதுடிக்க உயிரிழந்தன. சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.