நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள 52 சிறுவர் இல்லங்களில் 13 இல்லங்கள் இயங்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாக சிறுவர்பாதுகாப்புதிணைக்கள கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி தெரிவித்துள்ளார்.


சமகால கொரோனா நெருக்கடி நிலையில் கிழக்குமாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாகக் எமது செய்தியாளர் அவரை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் என அழைப்பது வழமை.கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 13 இல்லங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் 07 இல்லங்களுமாக மொத்தம் 52 சிறுவர் இல்லங்கள் இயங்கிவந்தன.

அவற்றுள் 13 இல்லங்கள் தற்சமயம் இயங்கவில்லை.திருகோணமலை மாவட்டத்தில் 07 இல்லங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 இல்லங்களும், அம்பாறை மாவட்டத்தில் 03 இல்லங்களுமாக மொத்தம் 13 சிறுவர் இல்லங்கள் இயங்காமலுள்ளன. அதாவது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு மூடப்பட்டுள்ளமையால் 1350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது ஆக 400 சிறுவர்களே வாழ்ந்துவருகின்றனர். ஏனைய 950பேர் கொரோனா அச்சம் மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக வீடு சென்றுவிட்டனர்.தற்சமயம் இயங்கிவரும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பலகோணங்களில் பார்க்கலாம்.

ஒவ்வொரு இல்லத்திற்கும் தாபரிப்பு உதவிப்பணமாக சிறுவர் ஒருவருக்கு மாதாந்தம் 500 ரூபாயை வழங்கிவருகிறோம். இல்லங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளை விட நன்கொடையாளர்களின் உதவிகளும் சுமாராக கிடைத்து வந்துள்ளன.

சிறுவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் காப்பாற்றப்படவேண்டியவர்கள். இன்றையசூழலில் இத்தகைய உதவிகள் கிடைப்பினும் உலருணவு தேவையாகின்றது. அதனைச்செய்ய பரோபகாரிகள் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று கூறியுள்ளார்.