முள்ளிவாய்க்கால் கஞ்சி மரபு

கேள்வி: முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறு என்ன?

பதில்: வன்னி பெருநிலப்பரப்பின் மீதான இனவழிப்பு போரினை சிறிலங்கா அரசானது தொடர்ச்சியான குண்டு மழையினுடாக முன்னெடுத்த சமநேரத்தில், மனித விழுமியங்களை மீறி பட்டினி சாவினுடாகவும் மக்களை கொல்வதற்காக திட்டமிட்டு உணவுப்பொருட்களை தடை செய்திருந்தது. சிறிலங்கா இராணுவம் படிப்படியாக மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச்சென்று ஒன்று குவித்தது. மட்டுப்படுத்த அளவிலான அரிசி ஒன்றினை தவிர ஏனைய உப உணவு வகைகள் கைக்கு எட்டாத ஓர் அவலநிலை. இதன்போது, களமுனை போராளிகளுக்காக சேமிக்கப்பட்ட அரிசியிலிருந்து காய்ச்சப்பட்ட உப்பில்லாத கஞ்சியே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியது. ஆயின், அக்கஞ்சியினைக்கூட நிம்மதியாக குடிக்க விடாது, கஞ்சிக்கு வரிசையில் நின்ற மக்கள் முப்படையினரின் மிலேச்சதனமாக தாக்குதல் மூலம் கொன்றொழிக்கபட்ட வரலாறுமுண்டு.

கேள்வி: முள்ளிவாய்க்கால் கஞ்சியின் முக்கியத்துவம் என்ன?

பதில்: எம்மீதான இனவழிப்பின் போது மக்களின் உயிரை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதில் பெரும் பங்காற்றியது முள்ளிவாய்க்கால் கஞ்சியே. ஒரு நாள் அல்ல, ஒரு வாரமல்ல, பல வாரங்கள் இதுவே உணவு. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, ஏன் இரவுபகலாக களமாடிய போராளிகளுக்கு கூட இதுவே உணவு. எமது இனத்தின் மீதான அழிப்பின் மிக முக்கியமான குறியீடு.

எப்படியாவது ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுகூட்டி பட்டினியுடன் மொத்தமாக அழித்துவிட தீட்டிய திட்டத்தினை, குண்டுவீச்சில் இறந்தவர் போக மீதிப்பேரை தனித்துநின்று உயிர்காத்த “ஜீவ அமிர்தம்”. அனுபவித்தவர்கள் மட்டுமே புரிந்துகொண்ட ஒரு இனப்படுகொலைக்கெதிராக போராடி உயிர்காத்து வரலாறு படைத்த கஞ்சி. இவ் வரலாறு எம்மிடையே ஆண்டாண்டு காலமாக ஓர் மரபாக பேணப்படுவதுடன் எமது வருங்கால சந்ததியினருக்கும் வாழையடி வாழையாக கடத்தப்படவேண்டும். முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழர் வாழ்வியலின் ஓரங்கமாக, கலாச்சாரத்தின் பகுதியாக மாற வேண்டும். தமிழீழ திருநாடு மலர்ந்த பின்பும் எமது விடுதலைக்கு நாம் கொடுத்த விலையை, எமது வலியுணர்வின் நினைவூட்டலாக தொடரப்படவேண்டும்.

கேள்வி: முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எவ்வாறு தயார் செய்து பரிமாறுவது?

பதில்: மே 18 நினைவேந்தலின் பின்பு, சிவப்பு பச்சை அரிசியில் உப்போ அல்லது வேறு ஏதும் சுவையூட்டும் பொருள்களோ / பதார்த்தங்களோ சேர்க்காமல் கஞ்சியினை காய்ச்சி, முள்ளிவாய்க்காலினை நினைவூட்டும் விதமாக மக்கள் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாதவர்கள், தத்தமது வீடுகளில் உப்பில்லாத கஞ்சியினை காய்ச்சி தமது அனைத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு மாற்றும் அயலவர்களுக்கும் வழங்கலாம்.

இதன்போது எமது இனத்தின் மீதான அழிப்பின் வரலாறு தெரியாதவர்கள், குறிப்பாக இளம்பராயத்தினர் மாற்றும் சிறார்களுக்கு எழும் இயல்பான “ஏன் உப்பில்லாத கஞ்சி?” என்ற கேள்வியினுடாக அவர்களுடன் உரையாடுங்கள். அவர்களுக்கு எமது இனம் எவ்வாறு சிறிலங்காவினாலும் மற்றும் 40ற்கும் மேற்ப்பட்ட சர்வதேச கூட்டினுடாக திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதினையும் எமது போராட்டத்தினது நியாயப்பாடுகளையும், எமது இனத்தின் விடுதலையின் அவசியத்தையும் எடுத்துக்கூறுங்கள்.

எமது இளைய சந்ததியினர் விடுதலை அவாவினையும், எமது தமிழீழ கனவினை தூக்கி சுமப்பவர்களாக மாற்றுவதற்கு இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்துங்கள். இதனுடாக எமது வரலாற்று கடமையினை செய்வதுடன் விடுதலையின்பால் தொடர்ந்து பயணிப்போம்.