கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், ஒரு உயிரைக் கூட இழக்காமல் அதிரடியாக மீண்டு வந்துள்ளது வியட்நாம் நாடு. வியட்நாமில் இதுவரை மொத்தம் 288 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கூட இந்த கொடிய வைரசிற்கு உயிர் பலியாகவில்லை.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் கூட வைரஸைக் கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், வியட்நாம் எப்படி சாதித்தது என்பது குறித்து அனைத்து உலக ஊடகங்களும் விவாதித்து வருகிறது. 9 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாம் நாட்டில் மௌர்த்துவ வசதிகள் குறைவாக இருந்ததால் கொரோனா வைரஸ் அதிகம் பரவினால் கட்டிற்குள் கொண்டு வர முடியாது என்பதை வியட்நாம் அரசு உணர்ந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஜனவரி மாதத்திலேயே கையில் எடுத்தது. மற்ற அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது வியட்நாம் தான்.
ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் கொரோனா நோயாளி வியட்நாமில் கண்டறியப்பட உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்றை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தாமல் மருத்துவமனைக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தினர். வியட்நாம் விஞ்ஞானிகள் மிகக் குறைந்த செலவில் கொரோனா பரிசோதனை சாதனங்களை உருவாக்கி விட்டார்கள். பிப்ரவரி மாதமே மற்ற நாடுகளில் இருந்து இயங்கும் விமான சேவையையும் ரத்து செய்தனர்.
ஆரம்ப கட்டத்திலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக கொரோனா வைரசை வியட்நாம் அரசு கட்டிற்குள் கொண்டு வந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனாவை கட்டுப்படுத்திய வியட்நாம் அரசின் நடவடிக்கை கொரோனாவால் சிக்கி தவிக்கும் மற்ற அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
கடந்த ஆறு நாட்களில் வியத்நாம் நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.